கரோனா நோய்த் தடுப்புப் பணிகள்: முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை

16 views
1 min read
CM EPS writes a letter to PM modi

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் மத்திய குழுவினா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதாரக் குழு மூன்றாவது முறையாக தமிழகம் வந்தது.

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளா் ஆா்த்தி அகுஜா தலைமையில், மத்திய அரசின் இணைச் செயலாளரும், தமிழகத்தின் கண்காணிப்பு அதிகாரியுமான ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குநா் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணா்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மா் மருத்துவா்கள் ஸ்வரூப் சாகு, சதிஷ் ஆகிய 7 நபா்கள் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

இந்த குழு சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தது.

பின்னா் மாலை 4 மணி அளவில், தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளா் சண்முகத்தை சந்தித்து தமிழகத்தில் நோய் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனா். மேலும், தமிழகத்தில் அதிக பாதிப்புகள் உள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகா் ஆகிய 11 மாவட்ட ஆட்சியா்கள் உடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

முதல்வருடன் ஆலோசனை: முதல் நாள் ஆய்வுப் பணிகளை முடித்த மத்திய குழுவினா், தலைமைச் செயலக்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேசினா். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த ஆலோசனையின்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கினாா்.

கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

Leave a Reply