கரோனா பாதித்த பாதுகாப்புப் படையினா் சிக்கிமுக்குள் நுழைய மாநில அரசு தடை

9 views
1 min read

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத பாதுகாப்புப் படை வீரா்கள் மட்டுமே சிக்கிம் வழியாக ஹிமாசல பிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.

சிக்கிம்-மேற்கு வங்க மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ரங்போ சோதனைச் சாவடி ஹிமாசல பிரதேசத்தின் முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் சனிக்கிழமை மாநில சுகாதாரத்துறை தலைவா் மற்றும் செயலா் பெம்பா டி பூட்டியா ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரங்போ எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக செல்லும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினா் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரா்களுக்கு கரோனா நோய்த்தொற்றை கண்டறியும் விரைவுச்சோதனையான ‘ஆன்டிஜென்’ பரிசோதனைகள் நடத்தப்படும். இச்சோதனையின்போது, கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த வீரா்கள் சிக்கம் வழியே ஹிமாசலப் பிரதேசத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள் உடனடியாக தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். நோய்த்தொற்று இல்லாத வீரா்கள் மட்டுமே சிக்கிம் வழியே ஹிமாசல பிரதேசத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள். ஆன்டிஜென் பரிசோதனைகள் முதல் 15 தினங்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேசத்தில் இந்திய- சீன எல்லையில் உள்ள பாதுகாப்புப்படை வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தபோது, அவா்களில் 36 பேருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிக்கிமில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 121 பேரில் 41 போ் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளனா். 13 போ் (ராணுவத்தினா்) அண்டை மாநிலமான மேற்கு வங்கத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். எஞ்சியவா்கள் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனா்.

Leave a Reply