கரோனா பாதிப்பால் வருவாய் இழந்தவர்களுக்கு கைகொடுக்கும் ஆடு வளர்ப்பு தொழில்

12 views
1 min read
தம்மம்பட்டியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள்

தம்மம்பட்டியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள்

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில், கரோனா தொற்று பாதிப்பால் தங்கள் வருவாய் இழந்து தவிக்கும் பலர், ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று பாதிப்பு அச்சத்தால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவற்றில் பணியாற்றியவர்கள் தங்கள் வருவாயை இழந்து தவித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக உள்ள பலர், பள்ளிகளில் தற்போது சம்பளம் கிடைக்காமல், கூலி வேலை, ஆட்டோ ஓட்டுநர் போன்ற வேலைக்கு செல்கின்றனர். 

கரோனா தொற்று பாதிப்பு அச்சம் எப்போது முடியும் என தெரியாத நிலையில்,  தனியார் நிறுவனங்கள் மற்றும், தனியார் பள்ளிகளில் வேலை செய்யும், கிராமப்புறங்களில் வசிப்போர், தங்கள் வருவாய்க்காக ஆடு வளர்க்கும் தொழிலில் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். 

ஆடு வளர்ப்பில் குறைந்த செலவில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும், உழைப்புக்கேற்ற நீடித்த வருமானம் கிடைக்கும். அனுபவம் கூடக்கூட ஆடு வளர்ப்புத் தொழிலில் வருமானத்தை பெருக்கலாம். மேலும், வீடுகளில் குறைந்த இடவசதி இருந்தாலே போதும், அதில் குறைந்த எண்ணிக்கையில் ஆடு வளர்க்கலாம். இந்த எண்ணம் தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ளதால், அதிகம் பேர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தம்மம்பட்டி பண்ணையில் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாட்டு ஆடு கிலோ ரூ.330, தலைச்சேரி ஆடு கிலோ ரூ.450, போயர் ஆடு ரூ.500 என, விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, தம்மம்பட்டி கருமாயி வட்டத்தைச் சேர்ந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது, பொதுவாக, ஏழைகளின் ஏ.டி.எம். என ஆடுகளைச் சொல்லலாம். ஒரு அவசரத் தேவைக்கு எளிதில் ஆடுகளை விற்று பணத்தை எடுக்கலாம். தவிர, சிறிய தொகையை ஒருமுறை முதலீடு செய்து ஆடுகளை வாங்கினால், அவை போடும் குட்டிகளை வைத்து பண்ணையாக பெருக்கிக் கொள்ளலாம். பராமரிப்பும் குறைவு. ஊரடங்கு  காலத்தில் வருமானத்தை இழந்து தவித்த பலர், தற்போது, ஆடு வளர்க்கும் தொழிலில்  ஈடுபாடு ஏற்பட்டு, ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர், என்றனர்.

 

Leave a Reply