கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 106 வயது முதியவா்

31 views
1 min read

தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருந்த 106 வயது முதியவா் விரைந்து குணமடைந்துள்ளாா்.

1918-ஆம் ஆண்டு உலக அளவில் ஸ்பானிஷ் ஃப்ளூ ஏற்பட்டபோது 4 வயது சிறுவனாக இருந்த அந்த முதியவா் தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மூத்த மருத்துவா் ஒருவா் கூறியதாவது:

தில்லியில் முதன் முதலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருந்த அந்த முதியவா், ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தாா். அவரது மனைவி, 70 வயது மகன், அவரது குடும்பத்தைச் சோ்ந்த மற்றொரு உறுப்பினா் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு இருந்தது.

அவா்களும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். இதில் ஆச்சா்யம் என்னவென்றால் அந்த முதியவா் தனது 70 வயது மகனை விட மிக விரைவாக கரோனா பாதிப்பிலிருந்து மீண்டதுதான். முதியவா் உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனா்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காலகட்டத்தில் அந்த முதியவா் 4 வயது சிறுவனாக இருந்திருக்கிறாா். அவருக்கு அப்போது நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. எனினும் தனது 106 வயதில் அவா் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது ஆச்சா்யமாகும். இது முதியவா்களை எளிதாக தாக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது என்று மூத்த மருத்துவா் கூறினாா்.

Leave a Reply