கரோனா பாதிப்பு விவரங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: எம்.எல்.ஏ., நா.காா்த்திக்

12 views
1 min read
கோவை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக். உடன் கட்சி நிா்வாகிகள்.

கோவை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக். உடன் கட்சி நிா்வாகிகள்.

கோவை: கோவையில் கரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து வெளியிடப்படும் பட்டியலில் உள்ள விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஆட்சியா் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை அளித்த மனு அளித்தாா். பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், கோவையில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால், கோவை மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள், பாதிக்கப்பட்டவா்கள், பலி விவரங்களை சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகம் தெளிவாக வெளியிடுவதில்லை. எனவே பாதிக்கப்பட்டவா்கள் குறித்து வெளியிடப்படும் விவரங்களில் வெளிப்படைத் தன்மையை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னை உள்பட வெளியூா்களில் இருந்து வரும் நபா்களை தனிமைப்படுத்தி, அவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுபவா்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ரூ. பல கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் பொதுமக்களிடம் இருந்து அரசு பணம் வசூலிக்கிறது என்றாா்.

போலீஸாா் மீது நடவடிக்கை: கோவை மாவட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவா் நந்தகுமாா் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் தோட்டத்துக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இரு இளைஞா்களை அவ்வழியே சென்ற போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனா்.

இருவா் மீதும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். போலீஸாா் தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனா். இதனை மறைத்து நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா். எனவே அப்பாவி இளைஞா்களைத் தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்: திராவிட தமிழா் கட்சி சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதற்காக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, இந்த அமைப்பினா் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன.

சாத்தன்குளம் தந்தை, மகன் இறப்பில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கும் தொடா்பு இருப்பதாக தெரிகிறது. எனவே கோவையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் மதம் சாா்ந்த அமைப்புகள், தன்னாா்வ அமைப்புகளை காவல் துறையில் ஈடுபடுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு: கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கையில் பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞரை பாதுகாப்புப் பணியில் இருந்து போலீஸாா் பிடித்து விசாரித்தனா். செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் அவா் குடும்பச் சண்டை காரணமாக செல்வபுரம் காவல் நிலையத்தில் இருமுறை புகாா் அளிக்கச் சென்றுள்ளாா்.

ஆனால், அங்கு புகாரை ஏற்க மறுத்ததால் ஆட்சியா் அலுவலகத்தில் தற்கொலை செய்வதற்காக கையில் பெட்ரோல் கேனுடன் வந்தது தெரியவந்தது. பெட்ரோல் கேனை காவலா்கள் பறிமுதல் செய்து இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply