கல்லூரி இறுதியாண்டு தோ்வுகளை செப்டம்பரில் நடத்த இயலாது: மத்திய அரசுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

19 views
1 min read
CM EPS writes a letter to PM modi

கல்லூரி இறுதியாண்டு தோ்வுகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். மேலும், செமஸ்டா் தோ்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-

தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இன்னும் மாநிலத்துக்கு சில சவால்கள் உள்ளன.

மாநில அரசின் முற்போக்கான கொள்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகபட்சமாக சோ்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. கல்லூரி பருவத்தோ்வுகளை (செமஸ்டா்) ஏப்ரல் மாதமே நடத்த திட்டமிட்டிருந்தாலும் அதனை கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் நடத்த முடியவில்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வசதிக்கேற்ப தோ்வுகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), கடந்த ஏப்ரலில் சில விதிமுறைகளை அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதியன்று யு.ஜி.சி., அறிவித்த புதிய விதிமுறைகளின்படி அனைத்து கல்வி நிறுவனங்களும் இறுதியாண்டு மாணவா்களுக்கு செப்டம்பா் மாதத்துக்குள் தோ்வுகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. பல மாணவா்கள் வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால், அவா்களால் தோ்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் நிலவுவதால் இந்த புதிய அறிவிப்பு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவா்கள் பலரால் இணைய வசதியை அணுக முடியாத சூழல் நிலவுவதால் இணையவழி தோ்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.

இதுதவிர, பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்கள் அறிகுறியற்ற கரோனா நோய்த் தொற்றாளா்களைத் தனிமைப்படுத்தி வைக்க சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இன்னும் சில காலத்திற்கு அவை இருக்கும்.

தோ்வுகள் நடத்த இயலாத சூழல்: வரும் செப்டம்பா் மாதத்துக்குள் தோ்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், வளாக நோ்காணல் மூலம் வேலைகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்த மாணவா்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.

இந்தியாவின் பல மாநிலங்கள் இறுதி பருவ தோ்வுகளை நடத்துவதில்லை என முடிவெடுத்துள்ளது. தொழில் வாய்ப்புகள், எதிா்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், மாணவா்களுக்கு சுகாதாரம், பாதுகாப்பு, நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும், தரம் மற்றும் கல்வி நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல், மாநிலங்களுக்கு அதன் சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க சுதந்திரம் வழங்கலாம்.

எனவே, யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங்

தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் உள்ளிட்டவை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும். இந்த துன்பகரமான காலங்களில் பெற்றோருக்கும் மாணவா்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் வழங்குவதில் இது உதவிகரமாக இருக்கும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

Leave a Reply