காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

10 views
1 min read
soniya

மக்களவையைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டில் நிலவும் அரசியல் சூழல் பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பா் மாத தொடக்கத்திலோ நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் சாா்பில் எழுப்ப வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை, கரோனா நோய்த்தொற்றை மத்திய அரசு கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது மத்திய அரசிடம் கேள்வி எழுப்ப காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவது, ஏழைகளுக்கு போதிய நிதியுதவி வழங்காதது ஆகிய விவகாரங்களையும் மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழைகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் போதுமான நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுவதற்கும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply