காரைக்காலில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா: ஒருவர் பலி

17 views
1 min read
5 year old child affected by corona in Erode

கோப்புப்படம்

 

காரைக்காலில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

காரைக்காலில் இதுவரை 46 பேர் கரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருவதாக நலவழித்துறை நிர்வாகம் தெரிவித்தது.

காரைக்காலில் தினமும் கரோனாவை உறுதிப்படுத்துவதற்காக நலவழித்துறை நிர்வாகம் ஏறக்குறைய 100 பேர் வரை சளி மாதிரி எடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவருகிறது. கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே இருந்துவந்தது.

இந்நிலையில் புதன்கிழமை காலை வந்த பரிசோதனை முடிவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் அரசு பொதுமருத்துவமனை கரோனா சிகிச்சை வார்ட்டில் சேர்க்கப்பட்டனர்.
 
கடந்த 6ஆம் தேதி இரவு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத் திணறல் இருப்பதாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். 

உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இவரிடம் கரோனா தொற்றை உறுதி செய்வதற்கான மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை முடிவு புதன்கிழமை வந்தபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக நலவழித்துறை நிர்வாகம் தெரிவித்தது.
 
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதோடு, ஒரே நாளில் 25 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

TAGS
coronavirus

Leave a Reply