கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிப்பு

16 views
1 min read
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய காலத்தில் மின் கட்டணம் செலுத்தாத 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 6,62,527 மின் இணைப்புகள் உள்ளன. கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 23-ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. பல்வேறு கட்டங்களாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு, ஊரடங்கில் பல தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் வீடுகளிலேயே முடங்கியதால் மின்சார பயன்பாடு அதிகரித்தது. இதனால் மின் நுகர்வோர் செலுத்தவேண்டிய மின் கட்டண தொகையும் உயர்ந்தது.

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தாலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் செயல்பட இயலாத சூழல் நிலவி வருகிறது, இதனால், மின் கட்டணம் செலுத்தாத சூழல் உள்ளது. இருந்தபோதிலும் மின் கட்டணம் செலுத்துவதில் எந்தத் தளர்வும் அறிவிக்கப்படாத தால் ஊரடங்கு காலத்திற்கான மின்கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய காலத்தில் மின் கட்டணம் செலுத்தாத சுமார் 60,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது கரோனா ஊரடங்கு காலத்திற்கு முந்தைய நிலையில் சராசரியாக 3,000 மின் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போதைய சூழலில் அபராதத் தொகை செலுத்தும் மின் நுகர்வோரின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் தெரிவித்தனர். 

மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் தவணை முறையில் செலுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே மின் நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

Leave a Reply