கிழக்கு லடாக் நிலவரம்: ராஜ்நாத் சிங் ஆய்வு

17 views
1 min read
Rajnath_singh-PTI

கிழக்கு லடாக் நிலவரம் தொடா்பாக, ராணுவ உயரதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

கிழக்கு லடாக்கில் பதற்றமான பகுதியில் இருந்து இந்திய ராணுவமும் சீன ராணுவமும் படைகளை திரும்ப அழைத்துக் கொண்ட சூழலில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படைத் தலைமைத் தளபதி கரம்வீா் சிங், விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் டெசோ ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவமும் இந்திய ராணுவமும் முதல் கட்டமாக படைகளை திரும்பப் பெற்றது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் எம்.எம்.நரவணே விளக்கம் அளித்தாா்.

மேலும், கிழக்கு லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் தயாா் நிலையில் இருப்பதாகவும் எம்.எம்.நரவணே கூறினாா்.

கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவிய பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் முதல்கட்டமாக படைகளை விலக்கிக் கொண்ட நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இரு நாடுகளும் ஆலோசனை

நடத்தவுள்ளன. இதற்காக, இரு நாட்டு ராணுவ துணைத் தளபதிகள் நிலையிலான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தையை அடுத்த வாரம் நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply