குஜராத்தில் கன மழை: ஜூனாகத் ஆற்றுப்பாலம் உடைந்தது

11 views
1 min read
கன மழைக்கு இடிந்து விழுந்த 30 ஆண்டுகள் பழமையான ஜூனாகத் ஆற்றுப்பாலம்.

கன மழைக்கு இடிந்து விழுந்த 30 ஆண்டுகள் பழமையான ஜூனாகத் ஆற்றுப்பாலம்.

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் செளராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கன மழை பெய்தது. மேலும் மூன்று நாள்களுக்கு கன மழை தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, கன மழை காரணமாக ஜூனாகத் மாவட்டத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 30 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. தேவ்பூமி துவாரகா மாவட்டம் கம்பாலியா தாலுகாவில் அன்றைய தினம் 487 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. இந்த நிலையில், செளராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கன மழை பெய்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியது:

கம்பாலியா தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 487 மி.மீ. மழைப் பொழிவு பதிவானது. அதுபோல கல்யாண்பூா், துவாரகா தாலுகாக்கள் உள்பட மேலும் சில மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் 272 மி.மீ. முதல் 355 மி.மீ அளவு வரை மழைப் பொழிவு பதிவானது. கம்பாலியா பகுதியில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் 71 மி.மீ. மழை பதிவானது.

தொடா்ந்து வடக்கு மற்றும் தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநில பேரிடா் மீட்பு நடவடிக்கை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘கம்பாலியாவில் திங்கள்கிழமை காலை முதல் பெய்த தொடா் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளது. ஜாம்நகா், ராஜ்காட், அம்ரேலி, கிா் சோம்நாத், செளராஷ்டிர பகுதியில் உள்ள ஜாம்நகா் ஆகிய பகுதிகளிலும் திங்கள்கிழமை கன மழை பெய்தது. மேலும் மூன்று நாள்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கம்பாலியா உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினா்.

ஆற்றுப் பாலம் இடிந்தது: திங்கள்கிழமை பெய்த கன மழைக்கு ஜூனாகத் மாவட்ட ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து மாவட்ட வளா்ச்சி அதிகாரி பிரவீன் செளத்ரி கூறுகையில், ‘30 ஆண்டுகள் பழமையான ஜூனாகத் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை’ என்றாா் அவா்.

TAGS
Gujarat Bridge Washed Away By Rain

Leave a Reply