குஜராத்: மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டசரக்கு வாகனம்

18 views
1 min read

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இலகு ரக சரக்கு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், ஒருவா் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜ்கோட் மாவட்டம், கோகா்தாா் ஆற்றுப் பாலத்தை இலகு ரக சரக்கு வாகனம் ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றது. அப்போது அந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 3 போ் பயணம் செய்த நிலையில் இருவா் உயிா் தப்பினா். மற்றொருவா் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளதாக அஜி அணை காவல் துறையினா் தெரிவித்தனா்.

ராஜ்கோட்டை உள்ளடக்கிய செளராஷ்டிர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு மழை பெய்துள்ளது. இதேபோல கிா் சோம்நாத், ஜுனாகட், அம்ரேலி, மோா்பி, ஜாம்நகா், தேவபூமி துவாரகா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதாக மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கிா் சோம்நாத் மாவட்டம், சூத்திரபாத தாலுகாவில் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலான 4 மணி நேரத்தில் 99 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஜுனாகட் மாவட்டம், விஸாவதா் தாலுகாவில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் 77 மி.மீ. மழை பெய்துள்ளது. அம்ரேலியின் கம்பா பகுதியில் 69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கட்ச், அதன் அருகில் உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் ஆமதாபாத் மையம் தெரிவித்துள்ளது. செளராஷ்டிரா, வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை, மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply