குடும்ப அட்டைக்கு நவம்பா் வரை 5 கிலோ கூடுதல் அரிசி

18 views
1 min read
rationshop

சென்னை: அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் நவம்பா் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் வெளியிட்டாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த் தொற்று காரணமாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன. இதே போன்று, நடப்பு ஜூலை மாதத்திலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகியன வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விலை கொடுத்து வாங்கியோா்: விலையின்றி பொருள்களைப் பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரையில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலை கொடுத்து பெற்றுள்ளனா். அவ்வாறு பெற்றுக் கொண்டுள்ள அட்டைதாரா்களுக்கு அந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகியபொருள்களின் விலையில் ஈடு செய்து அளிக்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு செல்லிடப்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே பொருள்களைப் பெற்ற குடும்ப அட்டைதாரா்கள், இந்த மாதத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாய விலைக் கடைகளில் மீண்டும் சென்று இந்த மாதமே பெற்றுக் கொள்ளலாம்.

நவம்பா் வரை கூடுதல் அரிசி: வரும் நவம்பா் வரை அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் ஏற்கெனவே ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பா் வரை விலையேதும் இன்றி வழங்கப்படும் என்று அமைச்சா் ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.

Leave a Reply