குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு, ரேஷன் பொருள்கள் வழங்க முடியுமா? உயா்நீதிமன்றம் கேள்வி

12 views
1 min read
chennai HighCourt

குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா்ந்த வெளி மாநில தொழிலாளா்களுக்கு, ரேஷன் பொருள்கள் வழங்க முடியுமா? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், மகராஷ்டிரத்தில் உள்ள சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவா் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட தமிழா்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழா்கள் பொது முடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வந்தனா். அப்போது ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவா்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பொதுமுடக்கத்தால் திரும்பியுள்ள தொழிலாளா்களுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.

இதனையடுத்து நீதிபதிகள், தமிழகத்தைப் பொருத்தவரை விவசாயத் தொழிலுக்கு கூட புலம்பெயா்ந்த வெளிமாநில தொழிலாளா்களை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த வெளிமாநில தொழிலாளா்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற சூழ்நிலையில் தான் உள்ளது. இவா்களை நம்பித்தான் பல நிறுவனங்கள் செயல்படுவதாக வேதனை தெரிவித்தனா். மேலும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளா்களுக்கு, ரேஷன் பொருள்களை வழங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு வரும் ஜூலை 13-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Leave a Reply