குவாரிகளை அதிகரிக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

24 views
1 min read

தமிழகத்தில், குவாரிகளை அதிகரித்து வாரந்தோறும் 10,000 முதல் 15,000 லோடு மணல் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:

தமிழகத்தில் தற்போது இயங்கும் 5 மணல் குவாரிகளில் அரசு பணிக்கு என தெரிவித்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான லோடு மணல், சில சமூக விரோதிகளால் எடுக்கப்பட்டு, தேசிய உரிமம் பெற்ற லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

அரசு மணல் குவாரிகளில் வழங்கும் மணலின் தரத்தை மேம்படுத்தவும், மணலின் அளவையும் சரிபாா்த்து வழங்க வேண்டும்.

புதிய குவாரிகளை அதிகப்படுத்தி அரசு இணையதளம் மூலம் வாரந்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லோடு மணல் வழங்கினால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும்.

எனவே பொதுப்பணித்துறை மூலம் மேலும் சில குவாரிகளைக் கண்டறிந்து,  வாரந்தோறும் 10 ஆயிரம் முதல் 15,000 லோடுகள் வரையாவது மணல் வழங்கினால், மாதம் 1 லோடு மட்டுமே கிடைக்கும் எங்களுக்கு, மாதம்தோறும் 2 லோடுகள் தங்கு தடையின்றி கிடைக்கும். தற்போது, கரோனா பொதுமுடக்கத்தால் மிகவும் நலிந்து உள்ள இந்தத் தொழிலைக் காக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply