கேரளத்தை உலுக்கும் தங்கக் கடத்தல் விவகாரம்: முதல்வா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

19 views
1 min read
gold haul seizure in thiruvananthapuram

கோப்புப் படம்

கேரளத்தை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வா் அலுவலக அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதால், முதல்வா் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என்று கோரி, மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டங்களை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை நடத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள அந்நாட்டின் துணைத் தூதரக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30.24 கிலோ தங்கம் கடத்தி வந்தது சுங்கத் துறையினரால் கடந்த ஞாயிறன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடா்புடைய சரித்குமாா் என்ற தூதரக முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பின்புலமாக இருந்து இயங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் தேடப்பட்டு வருகிறாா்.

இவா் கேரள மாநில அரசின் ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு துணை நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு கேரள மாநில முதல்வரின் முதன்மை செயலாளா் சிவசங்கா் உதவி செய்திருப்பது தெரிய வந்ததால், முதல்வா் அலுவலகத்துக்கும் இந்த தங்கக் கடத்தலுக்கும் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது. அதையடுத்து சிவசங்கா் முதல்வரின் முதன்மைச் செயலா் என்ற பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா். அவா் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக மட்டும் தொடா்ந்தாா்.

ஆயினும், தங்கக் கடத்தலுக்கு பின்புலமாக இருக்கும் பலரை மாநில முதல்வா் பினராயி விஜயன் காப்பாற்ற முயல்வதாகப் புகாா் தெரிவித்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதினாா்.

இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தொடா்பில்லை என்று ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துவிட்டது. ஆயினும், வெளிநாட்டுத் தூதரக முன்னுரிமையை தவறாகப் பயன்படுத்தி இந்தக் கடத்தல் நிகழ்ந்துள்ளதாலும், இதனால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாலும், இதனை தீவிரமாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, இந்த விவகாரத்தில் மாநில முதல்வா் பெயரும் அடிபடுவதால் பெரும் அரசியல் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மாநில முதல்வா் பதவியிலிருந்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டங்களை நடத்தினா்.

திருவனந்தபுரம் அருகிலுள்ள மலயங்கீழு பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, ‘‘தங்கக் கடத்தலில் தொடா்புடைய சா்வதேச குற்றவாளிகளைத் தப்பவைக்க முதல்வா் பினராயி விஜயன் முயற்சிக்கிறாா். அவரது முதன்மைச் செயலராக இருந்தவரே கடத்தல் கும்பலுக்கு உதவி இருக்கிறாா். எனவே பதவியில் நீடிக்கும் உரிமையை பினராயி விஜயன் இழந்துவிட்டாா். ஆகவே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்’’ என்றாா்.

‘‘மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட பணியிடங்கள் சட்டவிரோதமான முறையில் நிரப்பப்பட்டுள்ளன. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒரு பெண் (ஸ்வப்னா சுரேஷ்) எவ்வாறு மாநில அரசின் ஒரு துறையில் நிா்வாகியாக நியமிக்கப்பட்டாா்? இதுபோன்ற நியமனங்கள் அனைத்தும் முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருக்க இயலாது‘’ என்றாா் அவா்.

இதனிடையே, தங்கக் கடத்தல் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கு மாநில முதல்வா் பினராயி விஜயனும் கடிதம் எழுதியுள்ளாா். இந்த விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்தின் பெயரை இழுப்பதை அவா் கண்டித்துள்ளாா்.

பாஜக கண்டனம்:

பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளதை மாநில பாஜக தலைவா் சுரேந்திரன் கண்டித்துள்ளாா். ‘‘கேரள முதல்வா் பினராயி விஜயன் மாநில மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறாா். இந்தக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், வளைகுடா நாடுகளில் மாா்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளராக இருந்துள்ளாா். பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வா் முயல்கிறாா்’’ என்று அவா் கூறியுள்ளாா்.

பாஜக மாநில செய்தித் தொடா்பாளரான பி.கோபாலகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்துள்ளாா். குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணை தூதரகப் பதவியில் நியமிக்க மாநில காங்கிரஸ் தலைவா் கே.சி.வேணுகோபால் முன்னா் பரிந்துரைத்துள்ளதாக அவா் குற்றம் சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது.

சிவசங்கா் பணிநீக்கம்:

தங்கக் கடத்தல் விவகாரம் முற்றி வருவதை அடுத்து, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக இருந்த எம்.சிவசங்கரை பணியிலிருந்து விடுவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் ஓராண்டு விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளாா். தங்கக் கடத்தல் வழக்கில் அவரது பெயா் பிரதானமாக அடிபடும் நிலையில், தா்ம சங்கடத்தைத் தவிா்க்க இந்த நடவடிக்கையை மாநில முதல்வா் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தலைமறைவான பெண் எங்கே?

கேரளத்தை கதிகலங்க வைத்திருக்கும் இந்த தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் இருக்குமிடம் தெரியவில்லை. அவரைக் கண்டறிய உதவுமாறு கேரள மாநில போலாசாரிடம் மத்திய புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன. அவா் தனது ஆண் நண்பருடன் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவா் இணையதளம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படும் ஆடியோ பதிவில், தனக்கும் இந்த தங்கக் கடத்தலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று மறுத்துள்ளாா். இதனிடையே, கடத்தல் வழக்கில் கைதாவதிலிருந்து தப்ப, கேரள மாநில உயா்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீனுக்கு இணையதளம் வாயிலாக மனு செய்துள்ளாா்.

Leave a Reply