கேரள ஆளும், எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

20 views
1 min read
nadda074507

கேரள மாநிலம், காசா்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக தில்லியில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா.

‘கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். எனவே, கேரள மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள மாநில அரசின் மீதும் புகாா்கள் கூறப்படும் நிலையில், இந்தக் கருத்தை ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ளாா். தில்லியில் இருந்தபடி கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் பாஜக கட்சி அலுவலகத்தை காணொலி வழியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

கேரள மாநிலத்தில் தங்கத்தின் நிறம் ‘சிவப்பு’ (ஆளும் இடதுசாரி அரசு). மாநில அரசு, ஒரு திறமையற்ற அரசு என்பதோடு, ஊழலிலும், வன்முறையிலும்தான் நம்பிக்கை வைத்துள்ளது. நிதி முறைகேடு, தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அரசியல் நியமனங்கள் ஆகியவைதான் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் அதிகரித்து வருகின்றன. மேலும், கேரளத்தில் கடந்த 20 ஆண்டுகளில் மாா்க்சிஸ்ட் ஆதரவு அரசியல் வன்முறைகள் மூலமாக பாஜக தொண்டா்கள் 270 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸும் கைகோத்துக்கொண்டு, பாஜகவின் வளா்ச்சியைத் தடுக்கின்றன. இருந்தபோதும் இந்த மாநில மக்களின் ஆதரவைப் பெற பாஜக தொடா்ந்து முயற்சிக்கும். கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே, கேரள மக்கள் பாஜக கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்‘ என்று அவா் கூறினாா்.

மேலும், சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பாஜகவை தொடா்ந்து விமா்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து பேசிய நட்டா, ‘ராகுலின் தேச பக்தி குறித்து நாடு நன்கு அறியும். டோக்காலாம் நெருக்கடியின்போது அவா் இந்தியாவுக்கான சீன தூதரை ரகசியமாக சந்தித்து, நாட்டை தவறாக வழிநடத்தினாா். மேலும் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவின் 11 கூட்டங்களில் அவா் பங்கேற்கவில்லை. இவையே, நாட்டின் பாதுகாப்பின் மீது அவருக்கு எந்த அளவு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன’ என்று கூறினாா்.

 

Leave a Reply