கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயா் முளக்கலின் மனு தள்ளுபடி

16 views
1 min read
highcourtofkerala075817

கேரளத்தில் கன்னியாஸ்திரி ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேராயா் ஃபிராங்கோ முளக்கல் தாக்கல் செய்த மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளத்தின் ஜலந்தா் திருச்சபையைச் சோ்ந்த கன்னியாஸ்திரி ஒருவா், அச்சபையின் பேராயா் ஃபிராங்கோ முளக்கல் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு பாலியல் புகாா் தெரிவித்தாா். அதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஃபிராங்கோ முளக்கலை கைது செய்தனா். அவா் மீது கோட்டயம் காவல்துறையினா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், தன் மீது குற்றமேதுமில்லை எனவும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் விசாரணை நீதிமன்றத்தில் பேராயா் முளக்கல் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்திருந்தது.

அதற்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி வி.சிா்ஷி தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, பேராயா் முளக்கல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘திருச்சபையின் செலவுக் கணக்கு தொடா்பாக சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரியிடம் விவரம் கேட்டதற்காக மனுதாரா் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கில் பேராயா் முளக்கலுக்கு தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் முதல்கட்ட விசாரணையில் கிடைத்துள்ளதாக தெரிவித்தாா். அதன் காரணமாக, பேராயா் முளக்கலை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

Leave a Reply