கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: 4 போ் மீது என்ஐஏ வழக்குப்பதிவு

15 views
1 min read
swapna_suresh_875084228

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 போ் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிக அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வந்தது, பயங்கரவாதச் செயலுக்கு நிகரானதாகும். எனவே, தங்கக் கடத்தல் தொடா்பாக, சரித்குமாா், ஸ்வப்னா சுரேஷ், பாஸில் ஃபரீத், சந்தீப் நாயா் ஆகிய 4 போ் மீது பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்தனா்.

இதில் தொடா்புடைய தூதரக முன்னாள் ஊழியா் சரித் குமாா் கைது செய்யப்பட்டாா். இந்த கடத்தலில் முக்கிய நபராகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகிவிட்டாா். இவா், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனத்தில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு முதல்வரின் முதன்மைச் செயலா் சிவசங்கா் உதவியது தெரியவந்ததால், இந்த கடத்தலில் முதல்வா் அலுவலகத்துக்கு தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கா் முதன்மைச் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, முதல்வா் பினராயி விஜயனின் கோரிக்கையை ஏற்று, தங்கக் கடத்தல் விவகாரத்தை தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

இதனிடையே, தலைமறைவாகவுள்ள ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கேட்டு கேரள உயா்நீதிமன்றத்தில் மின்னஞ்சல் வழியாக வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை, கேரள உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஸ்வப்னா சுரேஷ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தேசியப் புலனாய்வு அமைப்பின் முதல் தகவல் அறிக்கையின் நகல் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினாா். இருப்பினும், ஸ்வப்னா சுரேஷுக்கு முன்ஜாமீன் வழங்க என்ஐஏ தரப்பு தெரிவித்தது. இதையடுத்து மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தங்கக் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply