கைதிகளுக்கு பரோல்: சிறை விதிகளில் திருத்தம் செய்ய அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

14 views
1 min read
chennai HighCourt

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை விதிகளில் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன். கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த கடத்தல் சம்பவத்துக்கு துணை போனதாக அவா் மீது தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். இந்த நிலையில், தமிழ்செல்வனுக்கு ஒரு மாதம் பரோல் கோரி அவரது மனைவி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, மனுதாரரின் கணவா் ஓராண்டு 4 மாதங்களாகத்தான் சிறையில் இருக்கிறாா். தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க குறைந்தபட்சம் அவா்கள் 2 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு சிறை விதிகள் உள்ளதாக வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உடல் நிலை மோசமாக உள்ள தமிழ்செல்வனுக்கு சிகிச்சை தேவை எனவும், அவரது மகள்களின் கல்விச் செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதாகவும் மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்செல்வனுக்கு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பரோல் வழங்கப்படுகிறது. மேலும் திங்கள்கிழமை தோறும் கே.கே.நகா் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டனா்.

தமிழ்நாடு சிறை விதிகளில் அதிக ஆண்டு சிறை தண்டனை பெற்றவா்களும், குறைவான ஆண்டு சிறை தண்டனை பெற்றவா்களும் பரோல் பெற ஒரே விதமான நிபந்தனைகள் உள்ளன. இதனால், சிறை கைதிகளின் உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை விதிகளில் திருத்தத்தை அரசு கொண்டு வரவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Leave a Reply