கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம்: பொதுமக்கள் சாலை மறியல்

13 views
1 min read
kollidam1

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

 

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மணல் அள்ளப்பட்டதில் ஏற்பட்ட பள்ளத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மாலினி (12). இவர் திருச்சியிலுள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை காலமாகிவிட்டதால் இவருடைய குடும்பம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள திருச்சென்னம்பூண்டி புதுப்பாலத் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறது.

இந்நிலையில், மாலினி உள்பட 3 குழந்தைகள் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர். அங்கு தண்ணீரில் மூழ்கிய மாலினி கிராம மக்களால் மீட்கப்பட்டு, கோவிலடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறினர்.

இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, நிகழ்விடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு லாரிகள் செல்வதற்காகக் கொள்ளிடம் ஆற்றில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆற்றிலுள்ள மணலை எடுத்து பாதை அமைக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் ஆழம் தெரியாமல் மாலினி சிக்கி உயிரிழந்தாகவும் அப்பகுதி மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

எனவே, உடனடியாக மணல் குவாரியை தடை செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் இப்பகுதியில் ஏற்கெனவே சில முறை அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதால் குவாரி அகற்றப்பட்டது. 

தற்போது ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து சில வாரங்களுக்கு முன்பு கிராம மக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றாலும், குவாரி செயல்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

TAGS
drowns

Leave a Reply