கோவையில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

16 views
1 min read
Coronavirus_Testing

கரோனா சோதனை

 

கோவையில் கரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கோவை, பெ.நா.பாளையம் வாஞ்சி மாநகரைச் சேர்ந்த 58 வயது முதியவர் மூச்சுத்திணறல் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

பரிசோதனை முடிவில் இவருக்கு  கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து இவரின் உடல் செவ்வாய்க்கிழமை காலை சுகாதாரத் துறை வழிகாட்டுதல் படி பாதுகாப்பான முறையில் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மேலும், கோவை, ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 58 வயது பெண் கடந்த ஜூன் 21ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் உடலைப் பாதுகாப்பான முறையில் எரியூட்டத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
 

TAGS
coronavirus

Leave a Reply