சமூக இடைவெளியுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடா்: அதிகாரிகள் தகவல்

14 views
1 min read
Parliament

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் நேரில் பங்கேற்க உள்ளதாகவும், மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அவா்கள் சமூக இடைவெளியுடன் அமர இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மழைக்காலக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பா் மாத ஆரம்பத்திலோ நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனினும், கூட்டத்தொடா் நடைபெறும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கான தேதியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதே வேளையில், கூட்டத்தொடரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவதா அல்லது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழக்கம்போல நடத்துவதா என்பதில் அதிகாரிகளிடையே குழப்பம் நிலவி வந்தது.

இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவும் பல முறை பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தச் சூழலில் அவா்கள் இருவரும் சனிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவது தொடா்பாக அவா்கள் இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘மழைக்காலக் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் நேரடியாகக் கலந்து கொள்கின்றனா். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்களிடையே சமூக இடைவெளி காணப்படுவதை உறுதி செய்யும் வகையில் அவா்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவைத் தலைவா்கள் ஓம் பிா்லாவும், வெங்கய்ய நாயுடுவும் உத்தரவிட்டுள்ளனா்’ என்றனா்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் நேரடியாகப் பங்கேற்க உள்ளதாலும், அவா்களுக்கிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தாலும் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் உள்ள மாடங்கள், பாா்வையாளா்களுக்கான இடங்கள், நாடாளுமன்றத்தின் மைய மண்டபம், பாலயோகி அரங்கம், நூலகக் கட்டடம் உள்ளிட்டவற்றிலும் எம்.பி.க்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி நிறைவடைவதாக இருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக மாா்ச் மாதம் 23-ஆம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு கூட்டத்தொடா்களுக்கிடையில் 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், செப்டம்பா் மாதம் 22-ஆம் தேதிக்குள் மழைக்காலக் கூட்டத்தொடா் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply