சலவை செய்து பயன்படுத்தும் பிபிஇ கிட்: முதல்முறையாக திருப்பூரில் அறிமுகம்

21 views
1 min read
ppe_kit

சலவை செய்து பயன்படுத்தும் பிபிஇ கிட்

 

இந்தியாவில் முதல் முறையாக காட்டனில் தயாரிக்கப்பட்ட சலவை செய்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ கிட் உடை  திருப்பூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூரில் உள்ள கின்சி நிட் இண்டர்நேஷனல் பின்னலாடை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.பரமசிவம், வர்த்தக பிரிவு இயக்குநர் விக்டர் மணிராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பிபிஇ கிட் எனப்படும் முழுப்பாதுகாப்பு கவச உடைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த உடைகள் நான் ஓவன் துணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 6 முதல் 8 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

இந்த உடைகளில் வியர்வையை உறிஞ்சும் தன்மை இல்லாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ஆகவே, மருத்துவர்களையும், செவிலியர்கள் மற்றும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக 15 முதல் 20 முறை சலவை செய்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ கிட் உடைகளைத் தயாரித்துள்ளோம்.  
இந்த உடைகளானது உலகத் தரம் வாய்ந்த இயற்கை தாவர மூலக்கூறுகளைக் கொண்ட மனித உடலுக்கு கவசமாக செயல்படும் செமி ஆர்கானிக் ஆண்டி மைக்ரோபையால் மூலமாக செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த உடைகளில் உள்ள கிருமி நாசினியானது வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை ஒரு நிமிடத்தில் அழிக்கும் தன்மை கொண்டது.  மேலும், இந்த உடைகளை அணிவதற்கு முன்பாக பின்னலாடைகளால் ஆன கவச உடை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

ஏனெனில் பிபிஇ கிட்டில் உள்ள ஜிப் வழியாக வைரஸ் உள்ளே சென்று விடாமல் தடுக்கவே பின்னலாடைகளால் ஆன உடையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத காட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அணிவதற்கு ஏதுவாகவும், வியர்வைகளை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும், எளிதில் மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுப்புறச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது. 

இந்தியாவில் சென்னை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்தும் இந்த பிபிஇ கிட உடைகளுக்கு வர்த்தக விசாரணைகளும், ஆர்டர்களும் வரத்தொடங்கியுள்ளது என்றனர். இந்த சந்திப்பின்போது கார்டியன் ஹெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

TAGS
PPE Kit

Leave a Reply