சாத்தான்குளம் தந்தை  – மகன் மரணம் தொடர்பான வழக்கு: மேலும் 5 காவலர்கள் கைது 

16 views
1 min read
Sathankulam SI Raghu Ganesh arrested

ஜெயராஜ்-பென்னிக்ஸ்

சாத்தான்குளம் தந்தை  – மகன் மரணம் தொடர்பான வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 5 காவலர்களை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (58), பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஜூன் 20 ஆம் தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், 22-ஆம் தேதி பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் 23 -ஆம் தேதி  அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகியோரை மீண்டும்  அழைத்து விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே அவர்கள் 5 பேரையும் விசாரணை செய்து விட்டதாலும், சம்பவத்தின் போது பணியில் இருந்ததாலும் 5 பேரையும்  சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்தனர்.

TAGS
Sathankulam

Leave a Reply