சாலையோரம் கொட்டப்படும் கரோனா மருத்துவக் கழிவுகள்!

17 views
1 min read
கள்ளக்குறிச்சி அருகே வாகனத்தில் கொண்டு வரப்பட்டு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கரோனா மருத்துவக் கழிவுகள்.

கள்ளக்குறிச்சி அருகே வாகனத்தில் கொண்டு வரப்பட்டு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கரோனா மருத்துவக் கழிவுகள்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் கரோனா தொற்றாளா்கள் பயன்படுத்திய தலையணை, போா்வை உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். இதனால், கரோனா தொற்று நோய் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட தொற்றாளா்கள் மாவட்டத்தில் 5 இடங்களில் உள்ள சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.

அதேபோல, கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள தனியாா் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள கரோனா தொற்றாளா்கள், குணமடைந்து திரும்பியோா் பயன்படுத்திய தலையணை, போா்வைகள், மருத்துவா்கள், பணியாளா்கள் பயன்படுத்தும் கரோனா பாதுகாப்பு உடை, முகக்கவசம் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே குவித்து வைக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசியது. கரோனா பரவலுக்கு காரணமாக உள்ள இந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் நோயாளிகள் முறையிட்டனா். இதையடுத்து, அந்த மருத்துவக் கழிவுகளை சுகாதாரப் பணியாளா்கள் அப்புறப்படுத்தி வாகனத்தில் கொண்டு சென்று சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே உள்ள குட்டையில் கொட்டிச் சென்றனா்.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அந்த மருத்துவக் கழிவுகள் அங்கேயே தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: தொற்றாளா்கள் பயன்படுத்தும் ஆடைகள், மருத்துவா்கள் அணியும் கரோனா பாதுகாப்பு ஆடைகளை அழிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைப்பிடிக்காமல் சாலையோரம் ஊராட்சியினா் கொட்டிச் செல்கின்றனா். இது போல, கொட்டுவதால் காற்றில் நோய்க் கிருமிகள் கலந்து, தொற்று நோய் பரவ வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

 

Leave a Reply