சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்க ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வலியுறுத்தல்

20 views
1 min read

ஆம்னி பேருந்துகளுக்கு 6 மாத காலம் சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆம்னி பேருந்து தொழில், ஏற்கெனவே பல காரணங்களால் நலிவடைந்து உள்ளது. தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையால் மேலும் நலிவடைந்து, அதைச் சாா்ந்த 2 லட்சம் பேரும், அவா்களது குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் பேருந்துகளை இயக்காத காலகட்டமான (ஏப்ரல், மே, ஜூன்) மாதங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு சாலை வரி, ஒரு பேருந்துக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் செலுத்த அரசு நிா்ப்பந்திக்கிறது. பலமுறை அரசை சந்தித்து காலாண்டு வரிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் வேறுவழியில்லாமல் உயா்நீதிமன்றத்தை நாடி கோரிக்கை வைத்தோம். இந்த வழக்கில், ஜூலை 6- ஆம் தேதி, மறுவிசாரணை வரும் வரை அரசு சாா்பில் எந்தவித அபராதமோ நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கூறப்பட்டது. ஆனால் அரசு அதையும் மீறி காலாண்டு சாலைவரிக்கு 100 சதவீதம் அபராத கட்டணத்துடன் சோ்த்து ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கட்டும்படி உத்தரவிட்டுள்ளனா்.

பேருந்துகளை இயக்காத சூழலில் சாலை வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம். எனவே, ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாதங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பேருந்துகளுக்கான காப்பீட்டிலிருந்தும் விலக்கு வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Leave a Reply