சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு தினந்தோறும் இலவசமாக மதிய உணவு

19 views
1 min read
WhatsApp_Image_2020-07-06_at_5

 

மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோருக்கு தினந்தோறும் மதிய நேரத்தில் இலவசமாக ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் ஏற்பாட்டில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 17 தூய்மைப் பணியாளர்கள், 7 துப்புரவு பணியாளர்கள், 6 குடிநீர் பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் உள்ளனர். இவர்கள் தினமும் காலை 6 மணிக்கே ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வீட்டில் சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தினசரி மதிய நேரத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதனால் தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில்: ஊராட்சி பகுதிகள் சுத்தமாக இருக்கவும் தூய்மையாக இருக்கவும் தடையின்றி மக்களுக்கு குடிநீர் செல்லவும் முக்கிய ஆதாரமாக இந்த 3 துறையை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் தங்கள் வீடுகளுக்கு சென்று உணவு உட்கொள்ள சிரமத்துடன் இருந்து வந்துள்ளனர். 

இதனை கருத்தில் கொண்டு தினசரி ஊராட்சியில் காலியாக உள்ள கட்டடம் ஒன்றில் இவர்களுக்கு சுகாதாரமான முறையில் சமைத்து சத்தான உணவுகளை  இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். வரும் காலங்களில் காலை நேரங்களிலும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு ஊராட்சிகளில் பொதுமக்கள் வீடு, குடிநீர் வரி கட்டவும், புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு ஒரே நாளில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில்: இந்த ஊராட்சியில் பல ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களின் வேலைப்பளுவை அறிந்தும் பசியறிந்து நேரத்திற்கு உணவு மட்டுமல்லாமல் எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைவர் செய்து தருவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை ஊக்கப்படுத்தி வரும் தலைவரை தலை குனிய விடாமல் ஊராட்சி பகுதிகளில் சுத்தமான முறையில் பணிகளை மேற்கொள்ள நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என கூறினர்.
 

Leave a Reply