சிதம்பரத்தை தனி மாவட்டமாகப் பிரிக்க த.மா.கா கோரிக்கை

19 views
1 min read
chidambaram1

சிதம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மூப்பனார் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் கே. பழனிச்சாமிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினரும் மூப்பனார் பேரவை நிறுவனரும் பொதுச் செயலாளருமான ஜெமினி எம்.என் ராதா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 

தமிழகத்தில், பெரிய மாவட்டங்கள் அதன் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகள் அடங்கிய, பெரம்பலூர் மாவட்டத்தை, பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளை வைத்து, பெரம்பலுார் மாவட்டமாகவும், அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதிகளை வைத்து அரியலுார் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது.தற்போது, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

கடலூர் விழுப்புரம் உள்ளிடக்கிய ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டமாக தனியாக பிரிக்கப்பட்டது. கடலூர் நகரம் மாவட்ட தலைநகரமாக இருந்ததால் இம்மாவட்டத்திற்கு கடலூர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. 

கடலூர் சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 9 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கடலுார் மாவட்டத்தை, மக்களின் நலனுக்காகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டு, சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். 

சிதம்பரம் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற தில்லை நடராஜர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட மருத்துவக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், சுற்றுலா ஸ்தலமான பிச்சாவரம் வனப்பகுதி உள்ளது. 

மேலும் இதுகுறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய்த் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏபாண்டியன் சிதம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் எனப் பேசினார். 

பொது மக்களின் நீண்ட நாள் இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மக்களின் நலனுக்காகவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அமைத்துத்தர வேண்டும் என மனுவில் எம்.என்.ராதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply