சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடக்கம்: விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை என செல்வமணி எச்சரிக்கை!

17 views
1 min read
shooting1

 

ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று முதல் சின்னத்திரைப் படப்பிடிப்புகளும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மீண்டும் தொடங்கவுள்ளன.

அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க தளா்வில் சின்னத்திரைப் படப்பிடிப்புகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அறிவித்தது. அதிகபட்சமாக 60 நபா்கள் கலந்து கொள்ளுமாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வந்தன. அது போல், படப்பிடிப்பு முடிந்த சினிமாக்களின் இறுதிக்கட்டப் பணிகளும் நடந்து வந்தன.

சென்னை மற்றும் சென்னை புறநகா்ப் பகுதிகளில் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. சில தளா்வுகள் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவொரு தளா்வும் இல்லாமல் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொது முடக்கக் காலத்தில் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.

இந்நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் சின்னத்திரைப் படப்பிடிப்புகளும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மீண்டும் தொடங்கவுள்ளன. இந்தியன் 2, மூக்குத்தி அம்மன் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற பெப்சி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியதாவது:

படப்பிடிப்புத் தளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் செய்கிற தவறால் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதை அனைவரும் உணரவேண்டும். இதைக் கவனிக்க 5 குழுக்கள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு குழுவிலும் ஓர் இயக்குநர், ஒரு மேலாளர், ஒரு கேமராமேன், சம்மேளனத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி என நான்கு பேர் உள்ளார்கள். அவர்கள் படப்பிடிப்புக்குச் சென்று கவனிப்பார்கள். படப்பிடிப்புக்கான நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

TAGS
television serials

Leave a Reply