சிவகங்கை மாவட்ட ஆரம்ப சுகாதர நிலையங்களில் கரோனா பரிசோதனை முடிவுகள் வரத் தாமதம், பாதிப்பு அதிகரிப்பதாக புகார்

16 views
1 min read
c

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாரத நிலையங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அந்தந்த வட்ட தலைமையிட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை மருத்துவர்கள் கரோனா பரிசோதனைக்காக அந்தந்த பகுதி தலைமையிட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

உயிரிழப்பு எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் அவ்வப்போது நிகழ்கிறது. அரசு நிர்வாகம் சார்பில் கரோனா விழிப்புணர்வு குறித்து தீவிர பிரச்சாரம் செய்தாலும் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளாமலும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவேளியை கடைபிடிக்காமலும் சகஜ வாழ்க்கை வாழ்கின்றனர்.தற்போது மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரோகித்நாதன் உள்பட ஏராளமான போலீசார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. 

இதற்கிடையில் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனைக்குச் செல்லும் நபர்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகள் கொடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது. பரிசோதனை எடுக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இவர்களில் பலபேர் தனிமையை கடைபிடிக்காமல் அனைத்து பகுதிகளிலும் நடமாடுகின்றனர். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது 4 நாட்கள் முதல் 6 நாட்கள் வரை ஆவதாகவும் அதற்குள் பரிசோதனை செய்து கொண்ட தொற்று பாதித்தவர் மூலம் கரோனா பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

எனவே பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்து கரோனா பாதிப்பு உள்ளவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தால் தொற்று பாதிப்பு குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்., அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனாா பரிசோதனைக்கான கிட்டுகள் குறைவாக இருப்பதால்தான் பரிசோதனை முடிவுகள் தாமதமாவதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply