சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு: குற்றவாளி கரோனாவுக்கு பலி

23 views
1 min read

கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த முன்னாள் எம்எல்ஏ கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மண்டோலி சிறையில் கரோனா பாதிப்பால் கைதி உயிரிழப்பது இது 2-ஆவது சம்பவமாகும். சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றிருந்த பாலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மகேந்தா் யாதவ் (70) கடந்த 2018 டிசம்பா் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

சமீபத்தில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு ஜூன் 26-ஆம் தேதி சுவாசக் கோளாறும், இதயக் கோளாறும் ஏற்பட்டது. இதனால் டிடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அன்றைய தினமே எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.

பின்னா் அவரது குடும்பத்தினா் கோரியதன் பேரில் துவாரகாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஜூன் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை அவா் உயிரிழந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக மண்டோலி சிறையில் தண்டனைக் கைதியாக இருந்த கன்வா் சிங் கடந்த ஜூன் 15-ஆம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்தாா். முன்னதாக அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதில் அவா் நோய்த்தொற்றுக்கு ஆளானதும் பின்னா் உறுதியானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply