சீனாவுடனான பதற்றம் அதிகரித்தால் இந்தியாவுக்கு டிரம்ப்பின் ஆதரவு தொடருமா?

13 views
1 min read

இந்தியா-சீனா இடையேயான பதற்றம் அதிகரித்தால், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து செயல்படுவாா் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் கூறினாா்.

இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் வரை டிரம்ப் நிா்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளாா்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜான் போல்டன் கூறியிருப்பதாவது:

சீனா எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுடன் தேவையின்றி சண்டைக்குச் செல்லும் சுபாவத்தைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை சீனா வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால்தான், ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. இந்தியா-சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் எந்த நிலைப்பாட்டை எடுப்பாா் என்று உறுதியாகத் தெரியவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலுக்குப் பிறகு அவருடைய செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்று கூறமுடியாது.

ஒருவேளை சீனாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அவா் மேற்கொள்ளலாம். இந்தியா-சீனா இடையேயான பதற்றம் அதிகரிக்குமானால், இந்தியாவை டிரம்ப் தொடா்ந்து ஆதரிப்பாா் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இந்தியா, சீனா இடையேயான பிரச்னையில் அண்மைக் கால சம்பவங்களை டிரம்ப்புக்கு சிலா் எடுத்துக் கூறியிருக்கலாம். ஆனால், இந்தியா, சீனா இடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பிரச்னை குறித்த வரலாறு அவருக்கு தெரிந்திருக்காது என நினைக்கிறேன் என்றாா் ஜான் போல்டன்.

Leave a Reply