சீன எல்லை பிரச்னையில் மத்திய அரசு உண்மைகளை மறைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

19 views
1 min read
ks_alagiri

சீனாவுடனான எல்லை பிரச்னையில் நடந்த உண்மைகளை மத்திய அரசு முழுமையாக வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழுமையான தோல்வியைத் தழுவியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேலூர் சிப்பாய் புரட்சி 214-ஆவது நினைவு தினத்தையொட்டி வேலூர் கோட்டை அருகே உள்ள நினைவுத் தூணுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது – இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு தொடக்கமாக வேலூர் சிப்பாய் புரட்சி அமைந்தது. இந்நிகழ்வு வேலூர் மாவட்ட மக்களுக்கு பெருமைதரக்கூடியதாக அமைந்துள்ளது. 

சீனாவுடனான எல்லை பிரச்னையில் மத்திய அரசு முழுமையான தோல்வியை தழுவியுள்ளது. 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டனர். ஆனால் அவர்கள் எங்கே இறந்தார்கள் என்பதை மறைக்கின்றனர். இந்திய வீரர்கள் இந்திய மண்ணில் உயிரிழந்திருந்தால் சீன படை ஊடுருவியதாக அர்த்தம். இதனை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் நாட்டுப்பற்று இல்லை, ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். நேரு பிரதமராக இருந்தபோது சீனா ஆக்கிரமிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். 

ஆனால் சீன விவகார த்தில் முழுமையான தகவல்களை பிரதமர் வெளியிட மறுக்கிறார். ராகுல்காந்தி பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கல் முடியாமல் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பெயரில் இயங்கக்கூடிய அறக்கட்டளையின் மீது விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர். இந்த அறக்கட்டளை அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதன் மூலம் ஊனமுற்றவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். 

இந்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் பிரதமர் நிவாரண நிதி என்ற திட்டத்தை பிரதமர் மோடி உற்பத்தி செய்துள்ளார். இதில் யாரெல்லாம் நன்கொடை வழங்கினர் என்பதை யாரும் அறிய முடியாது. சீன விவகாரத்தை மூடி மறைக்க அறக்கட்டளை தொடர் பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சுமாராகக்கூட செயல்படவில்லை. அதனால்தான் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
 

TAGS
KSAlagiri congress

Leave a Reply