சுய ஊரடங்கால் பென்னாகரம் பகுதிகளில் கடைகள் அடைப்பு

20 views
1 min read
shop_closed

பென்னாகரம் பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்

 

பென்னாகரம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்த நிலையில், பென்னாகரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர்  பொது முடக்கத்தில் சில தளர்வுகளுடன் விளக்களித்து தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கையானது 10க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பென்னாகரம் பகுதியினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். 

தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும் வகையில் , பென்னாகரம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஜூலை 5ஆம் தேதி தளர்வுகளின்றி பொது முடக்கத்தில் இருந்து ஜூலை 12 ஆம் தேதி வரை பென்னாகரம் பகுதியில் சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தனர். 

இந்த நிலையில் ஞாயிறு கிழமை பொது முடக்கத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், திங்கள் கிழமை மருந்தகங்கள், மருத்துவமனைகள், பாலகங்கள் தவிர்த்து மளிகை கடைகள், பழக்கடைகள், உணவகங்கள், ஆடையகங்கள், தனியார் தானிய மண்டிகள், இறைச்சிக் கடைகள், இனிப்பு வகை கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

மேலும் ஒரு சில காய்கறி கடைகள் மட்டும் இயங்கிய நிலையில், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. பென்னாகரம் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் பேருந்து நிலையம் பகுதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
 

TAGS
Pennagaram

Leave a Reply