சுருக்கு மடி வலையை அனுமதிக்கக் கோரி சீர்காழி அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்

15 views
1 min read
fishermen

சீர்காழி அருகே திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுருக்கு மடி வலைக்கு ஆதரவாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

மீனவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து கருப்புக் கொடியை கடையில் கட்டியுள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க கோரி திருமுல்லைவாசல், பழையார், கொட்டாயமேடு, மடவா மேடு, மன்மத தகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்புக் கொடி நட்டு இன்று திருமுல்லைவாசல் மடவாமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில்  மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடந்த பல வருடங்களாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தற்பொழுது தமிழக அரசு சுருக்கு மடி வலையை பயன்படுத்த தடை விதித்துள்ளதால், மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறி அவ்வாறு சுருக்கு மடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். 

சுருக்கு மடி வலையை பயன்படுத்தி பல வருடங்களாக மீன் பிடித்து வரும் தங்களுக்கு அரசு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசு இதில் தலையீட்டு சுமூக முடிவை ஏற்படுத்தி மீனவர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தவிர சில மாவட்டங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர், எனவும் அது போல் தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கையில் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் அனைத்து கிராம மீனவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  திருமுல்லைவாசல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வனிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தந்த கடை வாயிலில் கருப்பு கொடியையும் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சில மீனவ கிராமத்தில் இதற்கு எதிர்ப்பாகவும்  மீனவர்கள் போராட்டம் செய்ததால்  மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

TAGS
Sirkazhi

Leave a Reply