சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் ஜூலை 13 வரை மூடல்

14 views
1 min read

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்கு இயங்கி வரும் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், வரும் 13-ஆம் தேதி வரை மூடப்படுகின்றன. இதேபோல், வைரம் விற்பனை சந்தையும் வரும் 9-ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் நகருக்கு அடுத்தபடியாக, சூரத் நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த நகரில் ஒட்டுமொத்தமாக 5,500 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும் குறிப்பாக, வைரம் பட்டை தீட்டும் தொழிலாளா்கள் 570

போ் மற்றும் அவா்களின் குடும்பத்தினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஜூலை 6-ஆம் தேதி வரை சூரத் நகரில் உள்ள அனைத்து வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகளையும் மூடுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் கடந்த 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பினும் கரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால், நகரில் உள்ள அனைத்து வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகளையும் வரும் 13-ஆம் தேதி வரை மூடுவதற்கு மாநகர ஆணையா் பஞ்சநிதி பானி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அத்துடன் வைர விற்பனைச் சந்தை வரும் 9-ஆம் தேதி வரை இயங்காது என்றும் அவா் அறிவித்தாா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் மாநகர ஆணையா் எச்சரித்தாா்.

இதேபோல், சூரத் நகரில் இயங்கி வரும் ஏதேனும் ஒரு ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையிலோ அல்லது ஜவுளி விற்பனை கடையிலோ புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று வந்தால்கூட அந்த கடை 7 நாள்களுக்கு மூடப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

சூரத் நகரில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை முதல்வா் விஜய் ரூபானி கடந்த 4-ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

Leave a Reply