சென்னையில் அதிநவீன கரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

15 views
1 min read
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்காக சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து ஆய்வு செய்யும் முதல்வர்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்காக சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து ஆய்வு செய்யும் முதல்வர்.

சென்னை: சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட அதிநவீன கரோனா சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.

ரூ.127 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களும், உயிர் காக்கும் கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.

கரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து, இந்த மருத்துவமனை இரு வாரங்களில் அமைக்கப்பட்டதாகவும், 300 படுக்கைகளில் பிராணவாயு கருவிகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னையில் அமைப்பதற்காக 2014-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதற்கு அனுமதி கிடைத்தவுடன் சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் மருத்துவ மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நான்கு தளங்கள் கொண்ட அந்தக் கட்டடத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.

கடந்த சில வாரங்களாக சென்னையின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதைக் கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்பட்ட தேசிய முதியோர் மருத்துவ மையத்தை கரோனா மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று 14 நாள்களில் கரோனா மருத்துவமனையாக உருமாற்றப்பட்டது.

இங்கு மொத்தமுள்ள 750 படுக்கைகளில் 300 படுக்கைகள் பிராணவாயு கருவி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, 60 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளைப் பரிசோதிப்பதற்காக 16 சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், இசிஜி, 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

இதைத் தவிர, 28 செயற்கை சுவாசக் கருவிகள், 40 உயர் அழுத்த பிராணவாயு கருவிகள், 10 நடமாடும் பிராணவாயு வழங்கும் கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தொலைக்காட்சி வசதி, நூலக வசதிகள்அங்கு செய்யப்பட்டுள்ளன.

மேலும், யோகாசனப் பயிற்சிகள் அளிப்பதற்காக பிரத்யேக அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. காணொலி முறையில் அங்கு நோயாளிகளுக்கு யோகாசனப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. நோயாளிகள், தங்களது உறவினர்களுடன் காணொலியில் பேச வைஃபை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 80 மருத்துவர்களும், 100 செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளரும், கல்லீரல் துறை இயக்குநருமான மருத்துவர் நாராயணசாமி, சென்னை கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள வசதிகள், உயர் மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை அளிக்கும் முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அப்போது முதல்வர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின் போது மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை முதல்வர் விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply