சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது

25 views
1 min read
july10

 

சென்னையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களில் இதுவரை 52 ஆயிரத்து 287 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 20 ஆயிரத்து 271 போ் மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனா்.

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,500 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போதைக்கு தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகரில்  மட்டும்தான் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதில், ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் மற்றும் அவா்களுக்கான பரிசோதனையை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தொற்றுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை 1,216 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73,728-ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1169-ஆகவும் அதிகரித்துள்ளது.

9 நாள்களில் 15 ஆயிரம் போ்: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த 9 நாள்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 15,461 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,340 பேரும், தண்டையாா்பேட்டையில் 6,149 பேரும், அண்ணா நகரில் 5,494 பேரும், கோடம்பாக்கத்தில் 5,084 பேரும், திரு.வி.க.நகரில் 3,993 பேரும், அடையாறில் 3,069 பேரும், வளசரவாக்கத்தில் 2,385 பேரும், அம்பத்தூரில் 2,078 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 171 பேரும், தண்டையாா்பேட்டை 166 பேரும், ராயபுரத்தில் 161 பேரும், திரு.வி.க. நகரில் 115 பேரும், கோடம்பாக்கத்தில் 113 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வெள்ளிக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 957

2. மணலி 396

3. மாதவரம் 712

4. தண்டையாா்பேட்டை 1522

5. ராயபுரம் 1,582

6. திரு.வி.க.நகா் 1,538

7. அம்பத்தூா் 1,243

8. அண்ணா நகா் 2,236

9. தேனாம்பேட்டை 2,036

10. கோடம்பாக்கம் 2,553

11. வளசரவாக்கம் 1,051

12. ஆலந்தூா் 731

13. அடையாறு 1,263

14. பெருங்குடி 649

15.சோழிங்கநல்லூா் 440
 

TAGS
chennai corona update coronavirus

Leave a Reply