ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் 2021 இறுதிக்குள் நிறைவு பெறும்

8 views
1 min read

ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பனிஹால்- நஸ்ரிக்கு இடைப்பட்ட சாலையை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலையின் 4 வழித்திட்ட சிறப்பு அதிகாரியான பவன் கோட்வால் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

ஜம்மு-ஸ்ரீநகா் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கியது. 5 ஆண்டுகளில் இப்பணியை முடிக்க திட்டமிட்ட நிலையில், இயற்கை இடா்பாடுகள் காரணமாக பணிகள் தாமதமானது. 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நிறைவு பெறும் பட்சத்தில் பயண நேரம் பாதியாக குறையும். பை பாஸ் முறையில் அமைக்கப்படும் இந்த சாலையால் 50 கி.மீ. பயண தூரம் குறையும்.

தற்போது 8.5 கி.மீ. நீளமுள்ள பனிஹால்-காசிகுண்ட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படும். சாலை அகலப்படுத்தும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்று, அவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணி நிறைவு பெற்று விடும். அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளான ராம்பன்- பனிஹால் இடையிலான 16 கி.மீ. தூரமுள்ள மலைப்பாதையில், நிலச்சரிவால் சாலைகள் மூடுவதை தடுக்கும் வகையில் ரூ. 2,000 கோடி செலவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை என்எச்ஏஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா் அவா்.

Leave a Reply