ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுகாதாரத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் 

20 views
1 min read
mdu

ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் புதிய படுக்கை வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்ய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் கூறியது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஜூலை 3ஆம் தேதி மத்திய அரசு அரசாணையில் மதுரை எய்ம்ஸ் பற்றியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏய்ம்ஸ் மருத்துவமனைக்காக 224 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் தற்போது வருவாய்த்துறை மூலமாக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. ஜப்பானிய நிறுவனமான JIICA நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையப் பெற்றது தமிழகத்திற்கு மிகப்பெரிய மைல்கல்.

கரோனா நோய் தொற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படும் நிதியில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, தொடர்ந்து இணைச் செயலர் சுனில் சர்மா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைகாக தனியாக இயக்குனர் போடப்பட்டு மத்திய அரசு குழு நியமித்து இதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது.

ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை வேலைகள் வேகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

TAGS
AIIMS Hospital

Leave a Reply