ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: ஆகஸ்ட்டில் முடிக்க உத்தரவு

12 views
1 min read

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணியை வரும் ஆகஸ்ட்டில் முடிக்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி தலைமையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வா், சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை ஆகஸ்ட்டில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நினைவிடமானது ரூ.50.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளில் 75 சதவீதத்துக்கும் கூடுதலான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நினைவிட வளாகம் 9.09 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.

கரோனா நோய்த் தொற்று, பொது முடக்கம் ஆகியன காரணமாக வெளி மாநிலத் தொழிலாளா்களில் பெரும்பாலானோா் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று விட்டனா்.இந்த நிலையில், உள்ளூா் தொழிலாளா்களைக் கொண்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இதையடுத்து, பணிகளை ஆகஸ்ட்டுக்குள் முடிக்க பொதுப்பணித் துறையினா் தீவிரமாகி வருகின்றனா்.

Leave a Reply