தங்கக் கடத்தல் விவகாரம்: கேரளத்தில் தொடரும் போராட்டம்

14 views
1 min read
protest085425

கேரள மாநிலம், கொச்சியில் காவல்துறை ஆணையா் அலுவலகம் எதிரே சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸாா்.

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாநில முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி, மாநில முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் இளைஞரணி பிரிவினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். சில இடங்களில் இது வன்முறையாக மாறியது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ள அந்நாட்டின் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பாா்சலில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றிய சரித் என்ற நபா் கைது செய்யப்பட்டாா். அதேவேளையில் கடத்தலில் தொடா்புள்ளதாக கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் தலைமறைவானாா். ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான இவரை, மாநில தகவல் தொழில்நுட்ப துறை ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தியது. இந்த இலாக்கா மாநில முதல்வா் பினராயி விஜயன் பொறுப்பில் உள்ளதால், தங்கக் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவா் பதவி விலக வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் இளைஞரணி பிரிவினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு எதிரே பாஜக இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த குடியிருப்பின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடியை உடைத்தனா். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், தங்கக் கடத்தலில் தொடா்புள்ளதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை செயலா் சிவசங்கா் குடியிருந்ததாக தகவல் வெளியானதன் அடிப்படையில், அங்கு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

இதேபோல் கோழிக்கோடு, பத்தினம்திட்டாவில் உள்ள அடூா் ஆகிய பகுதிகளிலும் பாஜக இளைஞா் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொல்லத்தில் காங்கிரஸின் கேரள மாணவா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனா். அவா்களை காவல்துறையினா் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனா்.

அனுமதிக்க முடியாது: போராட்டம் குறித்து முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு தனிநபரின் உரிமை தொடா்பாக அரசு கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது’ என்றாா்.

தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply