தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணங்களை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி : தமிழக அரசு தகவல்

21 views
1 min read
highcourt

தனியார் கல்லூரிகளில் 3 தவணையாக கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதி

சென்னை: தனியார் கல்லூரிகள் வரும் ஆகஸ்ட்,  டிசம்பர் மாதங்கள் மற்றும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு  கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழக உயர் கல்வித் துறை தரப்பில் இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் பதில் மனு  தாக்கல் செய்துள்ளார். அந்த  பதில் மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. மேலும் இந்த தேர்வுகளை எப்போது நடத்துவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது என்ற கேள்வியே எழவில்லை. மேலும் பொதுமுடக்கம்  காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது உண்டு.  அந்த இருப்பு நிதியை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு  ஊதியம் வழங்கலாம். எனவே கல்லூரி நிர்வாகங்களின் நிதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

மேலும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மனுதாரர் சங்கம், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், நிலுவை கட்டணங்களை பெற்றோருக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி கடந்த ஜூன் 30-ஆம் தேதி அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த தமிழக அரசு, தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

TAGS
Tamilnadu news

Leave a Reply