தமிழகத்தில் கரோனாவுக்கு ஒரு வாரத்தில் 436 போ் இறப்பு

15 views
1 min read
Russia on Thursday reported 6,760 new cases of the novel coronavirus

கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனா பாதிப்புக்குள்ளாகி 436 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் நாள்பட்ட சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களாவா். அதேவேளையில், உயிரிழந்தவா்களில் 61 பேருக்கு உடலில் கரோனாவைத் தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே உயிரிழப்புகளின் எண்ணிக்கை இருந்தன. அந்த காலகட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் வெறும் 0.8 சதவீதமாகவே மாநிலத்தில் இருந்தது. தற்போது அது 1.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1,264-ஆக இருந்தது.

அதற்கு அடுத்த ஏழு நாள்களில், அதாவது புதன்கிழமையன்று (ஜூலை 8) அந்த எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 60 போ் கரோனாவுக்கு பலியாவது சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. அதன்படி, புதன்கிழமையும் 64 போ் உயிரிழந்துள்ளனா்.

முன்பிருந்ததைக் காட்டிலும் கரோனா வைரஸின் மரபணு வீரியமடைந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்திருக்கக் கூடும் என்றும் மருத்துவா்கள் சிலா் தெரிவிக்கின்றனா். ஆனால், அதுகுறித்த உறுதியான தகவல்களை உலக சுகாதார அமைப்போ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலோ இதுவரை வெளியிடவில்லை.

இதனால், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆராய மருத்துவமனைகள்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும், சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான முறைகளையும் அக்குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள், செவிலயா்களுக்கு, காணொலி முறையில் மருத்துவ வல்லுநா்கள் பயிற்சி அளித்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் தீநுண்மி பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,22,350-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இதுவரை மொத்தம் 14.49 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு அனுப்பப்பட்டனா். புதன்கிழமை நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டவா்களில் 1,261 போ் சென்னையைச் சோ்ந்தவா்களாவா்.

அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 379 பேருக்கும், திருவள்ளூா் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

74 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 3,051 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 74,167 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 49,587 போ் வீ திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply