தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை: ஜெ. ராதாகிருஷ்ணன்

15 views
1 min read
radhalrishanan

தமிழகத்தில் அதிக கரோனா பரிசோதனை

 

கரோனா நோய்த் தொற்று உறுதி செய்வதற்கான பரிசோதனை தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று  தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார். 

மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் திங்கள்கிழமை அவர் ஆய்வு செய்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் அறிவுரைப்படி கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் 12.8 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரம், தில்லியைக் காட்டிலும் பரிசோதனை தமிழகத்தில் அதிகம். அதிலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை இங்கு தான் அதிகமாகச் செய்து வருகிறோம்.

பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலமாக, கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகிறது. மேலும் பாதிப்பின் வீரியத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதற்கும் ஏதுவாகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. அதோடு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள பாதிப்பின் அடிப்படையில் தனித் திட்டம் தயாரிக்கப்பட்டு கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

மதுரையில் கரோனா சிகிச்சைக்காக 5,033 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.  அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை என 3 நிலைகளில் சிகிச்சைத் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேநேரம் அரசின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முகக் கவசம் அணிவதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் ச. விசாகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TAGS
coronavirus

Leave a Reply