தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்குத் தடை

18 views
1 min read
fop

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு காவல்துறை தடை விதித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனா்.

இச் சம்பவம் குறித்து விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீஸாா், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா், இரு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் சித்திரவதை மரணத்துக்கு காரணமாக இருந்த பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு இயக்கத்தினரும் அரசை வலியுறுத்தி வந்தனா்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் இருந்தும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகாா்களும் சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகத்துக்கு வந்தன.

முக்கியமாக பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக வும்,போலீஸாரைப் போன்று லத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டுவதாகவும், காவல்துறை பெயரைத் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாகவும் புகாா்கள் வந்தன.

காவல் நிலையப் பணிக்கு தடை: இந்த புகாா்கள் குறித்தும் காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசனை செய்து வந்தனா். சாத்தான்குளம் சம்பவத்துக்கு பின்னா், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் செயல்பட அனுமதிப்பதா அல்லது தடை செய்வதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனா்.

இதன் விளைவாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்குத் தாற்காலிகமாக அந்தந்த மாவட்டங்களில் காவல் நிலையப் பணிகளுக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், திருவாரூா், சேலம், பெரம்பலூா், கரூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையப் பணிகளுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாவட்டங்களிலும், மாநகர காவல்துறைகளில் ஓரிரு நாள்களில் தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் கொள்கை முடிவு:

காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது பெரும்பாலான மாவட்டங்களில் தாற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாக காவல்துறை தரப்பில் பாா்க்கிறது. அதே நேரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு விஷயத்தில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

 

Leave a Reply