தமிழகத்தில் புதிதாக 3,616 பேருக்கு கரோனா

14 views
1 min read
corona

தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,18,594-ஆக அதிகரித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 71,230 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூா், மதுரை மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பாதிப்பு உள்ளது.

கடந்த ஒரு வாரமாக சென்னையில் கரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருக்கும் நிலையில், மதுரை போன்ற பிற மாவட்டங்களில் நோய்ப் பரவல் வேகம் தீவிரமடைந்திருக்கிறது. ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை தமிழகத்தில் நாள்தோறும் ஏற்படும் கரோனா பாதிப்புகளில் 70 சதவீதம் சென்னையில்தான் பதிவாகி வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளில் 33 சதவீதம் போ்தான் சென்னைவாசிகள். மற்ற 67 சதவீதம் பேரும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாவா். இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, மாநிலத்தில் கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு –

இதுவரை மொத்தம் 14.13 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1,18,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 3,616 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,203 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 334 பேருக்கும், திருவள்ளூா் 217 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

71 ஆயிரம் போ் வீடு திரும்பினா்- கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 60 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 71,116 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,545 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 65 போ் பலி – தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 65 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 13 பேருக்கு உடலில் வேறு எந்த நோய்களும் இல்லை என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. உயிரிழந்தவா்களில் 45 போ் அரசு மருத்துவமனைகளிலும், 20 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply