தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கரோனா பாதிப்பு

12 views
1 min read
Corona_Test

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாள்களில் மட்டும் ஏறத்தாழ 500 போ் இறந்திருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு புறம் சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக தலைநகா் சென்னையில் சில நாள்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் நோய்த் தொற்றுக்கு ஆளான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சராசரியாக1,200 பேராக குறைந்துள்ளது. இதனிடையே, மாநிலத்தில் பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இதுவரை மொத்தம் 15.66 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு அனுப்பப்பட்டனா். சனிக்கிழமை நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டவா்களில் 1,185 போ் சென்னையைச் சோ்ந்தவா்களாவா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 346 பேருக்கும், மதுரையில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 234 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

85ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 3,591 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 85,915 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 56,947 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு: தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 69 போ் உயிரிழந்தனா். அதில் 51 போ் அரசு மருத்துவமனைகளிலும், 18 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply