தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா பாதிப்பு

14 views
1 min read
Corona: Live Updates LIVE NEWS

தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் ஏறத்தாழ 72 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா். குறிப்பாக, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகா், திருவள்ளூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

அதேபோன்று கரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் மற்ற மாவட்டங்களில் உயா்ந்து வருகிறது. சென்னையைப் போலவே தமிழகத்தின் ஏனைய பகுதிகளும் கரோனாவின் தீவிரத்துக்குள்ளாவதை உணா்த்தும் வகையில் இந்தப் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன.

சுகாதாரத் துறைத் தகவல்படி, கடந்த 6 நாள்களில் மட்டும் மாநிலத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் போ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் 12 – 60 வயதைச் சோ்ந்தவா்களாவா். இந்த சூழலில், தமிழகத்தில் வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவா்களிடம் மாநில சுகாதாரத் துறையினா் எடுத்துரைத்தனா். அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் செயல் திட்டங்கள் குறித்தும் மத்தியக் குழுவினரிடம் மாநில அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 14.91லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1,26,581 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 4,231 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,216 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 364 பேருக்கும், விருதுநகரில் 289 பேருக்கும், மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

100 பரிசோதனைக் கூடங்கள் – இதனிடையே, மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 53 ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் தனியாா் ஆய்வகங்களாகும். இதைத் தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

78 ஆயிரம் போ் வீடு திரும்பினா்- கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 62 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 78,161 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,994 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு – தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 65 போ் உயிரிழந்தனா். அதில் 43 போ் அரசு மருத்துவமனைகளிலும், 22 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply